கார்த்திக்ராஜா இசையமைத்து வழங்கும் ‘பட்டணத்தில் பூதம்’ நாடகம்:மேடையில் ஒரு மேஜிக் அனுபவம்!

Spread the love

சினிமா எவ்வளவோ வளர்ந்து இருந்தாலும் மேலைநாடுகளில் நாடகங்களை
மறப்பதில்லை. இன்றும் அங்கு மேடை நாடகங்கள் அரங்கேறுகின்றன ;
ரசிக்கிறார்கள். நம் நாட்டில்சினிமாவின் தாக்கத்தால் நாடகம்
நலிவுற்றாலும் இப்போதுதான் புத்துயிர் பெற்று வருகிறது. அதற்கு அண்மை
உதாரணம் ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பெற்றுள்ள வெற்றி.. இந்நிலையில்
சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா  ‘பட்டணத்தில் பூதம்’
என்கிற ஒரு மேடை நாடகத்தை முன்னெடுத்து வழங்குகிறார். இந்த மேடை நாடகம்,
சென்னை மியூசிக் அகாடமியில் செப்டம்பர் 18,19 மற்றும் 20 தேதிகளில்
வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்  மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் ஆதரவுடன் அரங்கேறும் இந்நாடகத்தில் திரைப்பட
நட்சத்திரங்கள் நாசர், பிரசன்னா, இயக்குநர் மனோபாலா, நாசர் மகன்
லுத்புதீன்,பாடகி சின்மயி, பாடகர்கள் ராகுல் நம்பியார்,  பிளாஸி,
ஜித்தேஷ், ஹரிஷ், ஸ்வேதா, நந்தினி ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கார்த்திக்ராஜா இசையமைப்பில் 4 பாடல்களும் உண்டு. பாடல்களை ப்ரியன்
எழுதியுள்ளார். பாடியும் நடிக்க வேண்டியிருப்பதால் பல பாடகர்,
பாடகிகளையும்  நடிக்க வைக்கின்றனர். உடைகள் வடிவமைப்பு வாசுகி பாஸ்கர்,
ஒலியமைப்பு தபஸ்நாயக், இவர் இந்தியில் ‘சீனிகம்’ , ‘ பா’ படங்களுக்கு
ஒலிப்பதிவில் புதுமை காட்டி மிரட்டியவர் .ஸ்டண்ட்-தினேஷ் , நடனம் –
சுரேஷ்.

இந்த மேடைநாடக முயற்சி பற்றி கார்த்திக்ராஜா பேசும் போது  ” வெளிநாடுகள்
போகும் போதெல்லாம் அங்கு நாடகங்கள் ரசிக்கப் படுவதைக் கண்டு வியந்து
இருக்கிறேன். பிராட்வே ஷோ போன்றவை அங்கு பிரபலமானவை. ‘லயன்கிங்’ போன்ற
கதைகள் படமாக வந்தாலும் நாடகமாகவும் ரசிக்கப்படுகின்றன.

சினிமா டிக்கெட் 50 டாலர், 80 டாலர் என்றால், நாடக டிக்கெட் 100 டாலர்
200 டாலர் ஏன் கடைசிநேரம் என்றால் 500 டாலர் வரை கொடுத்துக்கூட  வாங்கிப்
பார்க்கிறார்கள்.

இங்கு  நான் ஆர்.எஸ். மனோகரின் நாடகங்களைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
சினிமா, நாடக உலகத்தை பாதித்தாலும் இன்றும் கூட ‘பொன்னியின் செல்வன்’
போன்ற நாடகங்கள் வெற்றி பெற்று வருகின்றன. கிரேஸிமோகன், ஒய்.ஜி.
மகேந்திரன், எஸ்.வி.சேகர் போன்றவர்களும் நாடகங்கள் நடத்துகிறார்கள். நாம்
சினிமாவில் எவ்வளவு உயர்ந்தாலும் நாடகத்தை மறக்கக் கூடாது.

எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் எப்படிப்பட்ட கதை நாடகமாக இருந்தால்
பார்க்கப் பிடிக்குமோ அதையே  ‘பட்டணத்தில் பூதம்’ நாடகமாக்கி
இருக்கிறோம். ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ கதையை அடிப்படையாக்கி,அதன்
தாக்கத்தில் கதை அமைத்து உள்ளோம்.எங்கள் எண்ணத்தில் எழுந்த இந்த
முயற்சியை இவ்வளவு தூரம் நகர்த்திச் செல்ல உதவிய  நடிகர் நாசரின் பங்கு
மிகவும் பெரியது.

இதில் சஸ்பென்ஸ், திகில், சுவாரஸ்யம், கலகலப்பு ,பரபரப்பு எல்லாமும்
இருக்கும். முதன் முதலில் டால்பி ஒலியமைப்பை மேடை நாடகத்தில்
பயன்படுத்தி இருக்கிறோம் .

இந்நாடகம் சினிமா போல திருப்தியும் 2 மணி நேரம் நேரடி மேஜிக் அனுபவமாக
இருக்கும்விதத்தில்  இதில் பல ஆச்சரியங்களும் தொழில்நுட்ப அசத்தல்களும்
இருக்கும்.

ஒரு நாடகம் என்றால் அதில் பலரது உழைப்பு இருக்கும். இதில் நூற்றுக்கும்
மேற்பட்டவர்களின் பங்களிப்பும் உழைப்பும் இருக்கின்றன.

இப்போதே சென்னையை அடுத்து கோவையிலும் பிறபகுதிகளிலும்  நாடகம் நடத்த
அழைப்புகள் வந்துள்ளன.இது நாடக உலகத்துக்கு எங்களின் சிறிய சமர்ப்பண
முயற்சிதான், ஆதரவு தந்து ஊக்குவித்தால் அடுத்த முயற்சிகள் தொடரும். . ”
இவ்வாறு கார்த்திக்ராஜா கூறினார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.