‘ஹாட்ரிக்’ அடிக்கிறார் ஹாசிகா தத்!

Spread the love

‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ படத்தின் மூலமாக தமிழ்ச் சினிமாவுக்குள் கதாநாயகியாக ‘என்ட்ரி’ கொடுத்தவர் ஹாசிகா தத். முதல் படத்திலேயே குணச்சித்திரம், காமடி மட்டுமல்லாது மிரட்டும் பேயாகவும் நடித்து, தன்னால் எல்லாவித கேரக்டரையும் உள்வாங்கி ரசிகர்களைக் கவரமுடியும் என நிரூபித்துக் காட்டிய இந்த அழகுப் பதுமையின் திறமைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்கதவைத் தட்டினாலும், தனக்கான கேரக்டர் பேசப்படுமா என்பதில் கவனமாக இருக்கிறார். தனக்குப் பொருத்தமான கதை என்றால் மட்டுமே ஓ.கே சொல்கிறார்.

தெலுங்குப் பட உலகின் முன்னணி இயக்குநர் டி.வி.கே.நாகேஷ்வரராவ் இயக்கத்தில் ‘வளையம்’  எனும் படத்தில் கதையின் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்  ஹாசிகா தத்.

“நாகேஷ்வரராவ் இயக்கத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயம். கதைக்கு 100 சதவீதம் பொருந்தக்கூடிய கதை மாந்தர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் இயக்குநர் அவர். அந்த வகையில் ‘வளையம்’ படத்தின் கதைக்குப் பொருத்தமான நாயகியாக என்னைத் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த ‘வளையம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாராகிறது. என் போன்ற அறிமுக நடிகையின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து, மூன்று மொழிகளில் படத்தைத் உருவாக்குகிற இயக்குநருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘வளையம்’ எனும் பெயரில் உருவாகும் இந்தப் படம். கன்னட மொழியில் ‘வளா’ எனும் பெயரில் வெளிவரவிருக்கிறது.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரையும் வளைத்துப் போடுகிற விஷயங்கள் நிறைய உண்டு. அந்த வளைக்குள் கண்டுண்டு போகாமல், மீண்டு எழுகிறவர்களே சாதனையாளர்களாக, மற்றவர்களுக்குப் பயனுள்ளவர்களாகவாழ்வார்கள். இவர்களைத்தான் உலகம் போற்றும். இந்தப் படம் சொல்லவரும் விஷயமும் இதுதான்.

‘வளையம்’ படத்தின் தெலுங்கு தயாரிப்பில் எனக்கு ஜோடியாக, கதையின் நாயகனாக நடிப்பவர் இளம் முன்னணி நாயகன் சந்தேஷ். தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எனக்கு ஜோடி யார் என்கிற தேர்வு நடந்துவருகிறது.

‘ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட்’ படத்திற்குப் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளுக்கும் சேர்த்து ஒரே படத்தில் நடிப்பது என் திரையுலக வாழ்வில் சிறப்பான திருப்புமுனையாக அமையும். ‘வளையம்’ எனக்கு கிடைத்த ஹாட்ரிக் விக்கெட்’’ எனச் சிரித்துக்கொண்டே விடைபெற்றார் ஹாசிகா தத்.

திறமையுள்ளவர்களுக்கு வாய்ப்புகளைக் கொடுக்க சினிமா உலகம் தயங்காது என்பது ஹாசிகா தத் மூலமாக மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.