ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா பார்ட்அவுட் ஃபிளவர்ஸ் ஓவியக் கண்காட்சி

Spread the love

ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா (Artist Gayathri Raja) அவர்களின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் கண்காட்சி சென்னை அம்பாசிடர் பல்லவாவில் (Hotel Ambassador pallava)உள்ள கலைக்கூடத்தில் ஜூன் 16ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பூக்களை மையப்படுத்தி வரையப்பட்டுள்ள இந்த ஓவியக் கண்காட்சியை, திருவான்மியூரை சேர்ந்த ரோட்டரி கிளப்பின் முன்னாள் தலைவர் கருணாநிதி, தமிழ்நாடு கலை மற்றும் கைத்தொழில் மேம்பாட்டு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ‘கலைச் செம்மல்’ டாக்டர் பி ஆர் அண்ணன் பிள்ளை , ஸ்ரீ தர்ஷினி கலைக்கூடத்தின் இயக்குனர் ‘கலைவளர் மணி’ வாகை டி தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

ஓவிய கண்காட்சியில் இடம்பெற்ற பெரும்பாலான ஓவியங்கள் விதவிதமான வண்ணங்களில், விதவிதமான வடிவங்களிலும் உள்ள பூக்களை கருப்பொருளாகக் கொண்டு படைக்கப்பட்டது. பூக்களை ஓவியங்களாக வரையும் போக்கு பத்தாம் நூற்றாண்டில் பாரிஸ் நகரில் அறிமுகமானது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரிஸ் மாநகரில் இத்தகைய ஓவியங்களுக்கான தனி கண்காட்சி கூடங்களும் இருந்ததாக ஓவியக் கலைஞர் காயத்ரி ராஜா பகிர்ந்து கொண்டார்.

இவருடைய ஓவியங்களில் தனித்த பூக்களும், அதில் இடம்பெற்ற வண்ணங்களும் பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது. இத்தகைய ஓவியங்களை அவர் கேன்வாஸ், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங்களிலும் வரைந்திருந்தது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது.

காயத்ரி ராஜாவைப் பற்றி..

ஓவிய கலைஞரான காயத்ரி ராஜா எம்பிஏ பட்டதாரி பட்டம் பெற்றிருந்தாலும் ஓவியத்தின் மீதான ஆர்வத்தின் காரணமாக ஓவியக்கலையில் டிப்ளமோ பட்டம் பெற்று, தொடர்ந்த அவருடைய ஈடுபாட்டின் காரணமாக 2005 ஆம் ஆண்டில் ஓவிய பயிற்சியை பெற தொடங்கினார். அதற்கு அடுத்த ஆண்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணியாற்ற தொடங்கி, அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்ப்பதற்காக ஓவியத்தை ஒரு காரணியாக்கி, அப்பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை ஓவியத்தின் பக்கம் கவனத்தைத் திருப்பினார். இவர் தற்போது சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் வசிக்கிறார் .

TACIA வில் உறுப்பினராகவும் உள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் ஜி ஆர் கலை மையம் என்ற பெயரில் ஒரு ஓவிய நிறுவனத்தைத் தொடங்கி ஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓவியத்தை கற்பித்து, அவர்களின் திறமைகளை வெளிக் கொணர்வதற்கான செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தன்னிடம் ஓவியம் கற்கும் மாணவர்களின் படைப்புகளை, கண்காட்சியாக வைத்து பார்வையாளர்களையும் படைப்பாளிகளையும் ஒரு புள்ளியில் சந்திக்க வைத்து அவர்களின் திறமைக்கு சான்றாக விளங்கினார்.

இவரிடம் கற்ற மாணவர்கள் மாநில ,மாவட்ட ,தேசிய அளவில் பல சாதனைகளை செய்து உள்ளனர் .எந்த போட்டிக்கு சென்றாலும் பரிசுகளோடு தான் வருவார்கள்.இவர் ஓவிய ஆசிரியராக பணியாற்றிக் கொண்டே ஏராளமான ஓவியக் கண்காட்சிகளை சென்னை, பெங்களூரூ, கொச்சி, எர்ணாகுளம், புதுச்சேரி, அமிர்தசரஸ், ஆந்திர பிரதேசம் மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் ஓவியக் கண்காட்சியை தனியாகவும், குழுவாகவும் நடத்தியிருக்கிறார்.

இவர் தன்னுடைய ஓவியத் திறமையை மேம்படுத்திக் கொள்வதிலும், ஓவிய பாணிகளில் பலவற்றை பின்பற்றுவதிலும் குறிப்பிடத்தக்க கலைஞராக திகழ்கிறார். இவர் கேரள முரல், கரித்துண்டு ஓவியம், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங், எம்போஸ் முரல் பெயிண்டிங் மற்றும் இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள பாரம்பரியமான ஓவியங்கள் வரைவதிலும் தன்னிகரற்றவராக திகழ்கிறார்.

இவரின் ஓவியத் திறமைக்கு ஒவ்வொரு படைப்புகளுமே சான்று என்பது வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டு குறிப்புகளே சான்று. காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பையும், பார்வையாளர்கள் நின்று நிதானமாக ரசித்து, அனுபவித்து கடந்து சென்றது மகிழ்ச்சியான அனுபவம்.

இந்த கண்காட்சி ஜூன் 16ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும் என்பது சென்னையில் உள்ள ஓவிய ஆர்வலர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.

Watch  Video of this event

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.