மன்சூர் அலிகானைப் போல நடிக்கச்சொல்லிப் பாடாய்ப் படுத்திய இயக்குநர்!- ‘அதிரடி’ படவிழாவில் நாசர் பேச்சு

Spread the love

இயக்குநர் ஒருவர் தன்னை மன்சூர் அலிகானைப்போல  நடிக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்தியதைப் பற்றி ஒரு சினிமா விழாவில் நாசர் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு;

நடிகர் மன்சூர் அலிகான் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி, இசையமைத்து இயக்க மேற்பார்வை செய்து,நடித்து,  ராஜ்கென்னடி படநிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘அதிரடி’.மன்சூர் அலிகானுடன் மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா, காவ்யா, ராதாரவி, செந்தில் மற்றும் டாப்சி அமைப்பைச் சேர்ந்த கலைஞர்கள்  நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய மன்சூர்அலிகான், “தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விழாவுக்கு வரவேண்டியது அவர்கள் கடமை. வருவார்கள் என்று பெயர்கள் போட்டிருந்தேன். யாரும் வரவில்லை. நான் அதுபற்றிக் கவலைப்படுவதும் கிடையாது. நான் யாருக்கும் பயப்படுவதும் இல்லை. நான் உருவாக்கியிருக்கும் ‘டாப்சி’ யாருக்கும் போட்டியான அமைப்பு இல்லை. மற்ற சங்கத்தில் சேர 5 லட்சம் வாங்குகிறார்கள். நான் வெறும் 2000 வாங்கிக் கொண்டு இந்த சங்கத்தில் சேர்த்துக் கொள்கிறேன்.

சினிமா நிரந்தரமில்லை. எம்.ஜி.ஆர். வந்தார் சிவாஜி வந்தார். இன்று இல்லை. நாளை நானும் இல்லை.6 ஆண்டுகளுக்குமுன் கார்த்தி யாரென்று தெரியுமா? 5 ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி யாரென்று தெரியுமா? இன்று பெரிய நடிகர்களாக அவர்கள் வர வில்லையோ? ஆனால் தொழிலாளி மட்டும் புதிதாக வரக் கூடாதா? ”என்றார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது இன்றைக்குள்ள முக்கியபிரச்சினை மதுவிலக்கு, சினிமா இது இரண்டையும் பற்றி மன்சூர்அலிகான் படமெடுத்துள்ளார்.

அவர் செய்வது சிலநேரம் பைத்தியக்காரத்தனம் போல் தெரியும்.ஆனால் அதில் மனிதாபிமானம் இருக்கும். அவர் தொழிலாளர்களின் கஷ்டம் புரிந்தவர். அன்றன்று சம்பளம் கொடுப்பவர் இது தவறா? இவ்விழாவுக்கு எங்கள் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து யாரும் வரவில்லை. இவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர்தானே? சங்கத்தில் தலைவர்கள் எல்லாருக்குமா வேலை? வாழ்த்த எண்ணமில்லை,யாரும் வரவில்லை. இதில் காட்டும் ஒற்றுமையை தொழில் வளர்ச்சிக்காகச் செய்யுங்கள் .அவர்களது செயல்பாடுகள் ஏட்டளவில்தான் இருக்கிறது ஒருதயாரிப்பாளர் ஆடியோ வெளியீடு வரைதான் சிரிக்கிறான்.பிறகு படம் வெளியிடும்வரை அழுகிறான். தயாரிப்பாளர் பிரச்சினை தீர தயாரிப்பாளர் சங்கத்தில் வழி கேட்டால் படமெடுத்தால்தானே நஷ்டம் வருகிறது? நஷ்டம் வருகிறது என்றால் படமெடுக்காதே என்கிறார்கள்.இது சொல்லத்தானா தயாரிப்பாளர் சங்கம்? ”என்றார்.

நாசர் பேசும் போது ”மன்சூர்அலிகான் யாருக்கும் பயப்படமாட்டார். அவரது தோற்றத்துக்கும் குணத்துக்கும் சம்பந்தமிருக்காது.மனதில் அன்பு இருக்கும் . அழகேஷ் என்றொரு இயக்குநர் என்னை மன்சூர்அலிகான் முரட்டு யானையைக் கட்டிப் போட்ட மாதிரி ஆடிக்கிட்டே இருப்பார் என்று கூறி அவரைப் போல நடிக்கச் சொல்லிப் பாடாய்ப் படுத்தினார். கடைசி வரை அவரைப் போல என்னால் நடிக்கவே முடியவில்லை. மன்சூர்அலிகான் காப்பியடிக்க முடியாத ஒரு நடிகர்.அவர் எல்லாரையும் சிரிக்க வைப்பார். கஷ்டத்தை மட்டும் பங்கு போட மாட்டார்.”என்றார்.

உமர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் உமர் பேசும் போது ” நான் பாகவதர். எம்.ஜி.ஆர். சிவாஜியை எல்லாம் வைத்துப் படம் எடுத்தவன். என்னைவிட வயதில் மூத்த எம்.ஜி.ஆர். என்னை முதலாளி என்றுதான் அழைப்பார். அப்போது தயாரிப்பாளர்களுக்கு மரியாதை இருந்தது. நடிகர்களுக்குத் தொழில்பக்தி இருந்தது. .இன்று அது இல்லை. இன்றைய நடிகர்கள் நல்ல நடிகர்களாக இருந்தால் மட்டும் போதாது. பண்பாளர்களாகவும் இருங்கள் குடியை எதிர்ப்பதற்காகவே இந்த ‘அதிரடி’ படம் ஓடும். ” என்றார். விழாவில் நடிகர்கள் ரமணா, செந்தில் ,விக்னேஷ்,வேல் முருகன், இயக்குநர்கள் ஆர். சுந்தர்ராஜன். ஈ.ராம்தாஸ், ஜமீன்ராஜ். தயாரிப்பாளர்கள் ‘பட்டியல்’ சேகர்,எடிட்டர் மோகன்,பெருமாள்சாமி,  நாயகி மௌமிதா சௌத்ரி ஆகியோரும் பேசினார்கள்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.