‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவு; எய்ட்ஸ் பாதித்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கிய ‘மோடி கிச்சன்’ அமைப்பு!

Spread the love

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. அதன் காரணமாக ஏழை எளிய மக்கள் தங்கள் உணவுத்தேவையை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமத்தைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவும் நோக்கில் அரசாங்கமும், தொண்டமைப்புகளும் பல்வேறு விதங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், வெகுநாட்களாகவே ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிற ‘மோடி கிச்சன்’ என்ற அமைப்பும் களத்தில் இறங்கி, அவ்வப்போது எளிய மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 3.4.2020 வெள்ளியன்று சென்னை வில்லிவாக்கம் வெற்றிச்செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள சவுத் இந்தியன் பாசிட்டிவ் நெட்வொர்க் (SIP Memorial Trust) என்ற தொண்டமைப்பில் இருக்கிற பிள்ளைகளுக்கு மோடி கிச்சன் அமைப்பின் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது.

மோடி கிச்சன் அமைப்பின் நிறுவனரும், பா.ஜ.க.வின் தென்சென்னை மாவட்டத் தலைவருமான வி.கே. வெங்கடேஷ் பிள்ளைகளுக்கு மதிய உணவைப் பரிமாறி அவர்களுடன் உரையாடினார்.

இந்தியாவில் எய்ட்ஸ் பாதித்த முதல் நபராக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட திருநங்கை நூரி பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இந்த அமைப்பில், எய்ட்ஸ் பாதித்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட பிள்ளைகள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அனைத்து தேவைகளையும் அன்போடு அரவணைத்து செய்து கொடுத்து வருகிறது சவுத் இந்தியன் பாசிட்டிவ் நெட்வொர்க் (SIP Memorial Trust) என்ற அமைப்பு.

திருநங்கை நூரியிடம் பேசினோம்…
“இன்னைக்கு எப்படி ‘மோடி கிச்சன்’ அமைப்பு சார்பா எங்க பிள்ளைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுச்சோ அதே மாதிரி நல்ல மனசுள்ள மனிதர்கள், நல்ல மனிதர்கள் நடத்துற டிரஸ்டுகளோட உதவியால இங்குள்ள பிள்ளைகளை என்னோட சொந்த பிள்ளையா எந்த குறையுமில்லாம நல்லபடியா பார்த்துக்க, பராமரிக்க முடியுது. அடுத்தகட்டமா இந்த பிள்ளைகளுக்காக இங்கே இருக்குறதைவிட பெரியளவுல ‘ஹோம்’ கட்டுற முயற்சியில இருக்கேன். அந்த பணி இப்போ பாதி முடிஞ்சிருக்கு. முழுசா முடிக்கிறதுக்கு நல்ல உள்ளங்களோட உதவியை (Sponcers) எதிர்பார்த்துக்கிட்டிருக்கேன்” என்றார்.
உதவ முன்வருகிறவர்கள் நூரி அவர்களை 91764 64477 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.