மஞ்சள் – வேப்பிலைக் கரைசல்; நிலவேம்புக் குடிநீருடன் மிளகும் கல் உப்பும்! -‘கொரானோ வைரஸ்’ தடுப்பில் தீவிரம் காட்டும் அம்மா உணவகம்

Spread the love

தொடர்ச்சியாக ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைச் செய்துவருகிறது ‘தமிழ் விஸ்வகர்மா சமுதாய தொழில் சேவா சங்கம்.’ அந்தவகையில், 30.3.2020 அன்று சென்னை நெற்குன்றம் பகுதிக்குட்பட்ட மேட்டுக்குப்பம் ‘அம்மா உணவகம்’ மூலம் எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கத் தீர்மானித்தனர். அதன்படி, அன்றைய தினம் மதியம் அம்மா உணவகத்துக்கு வந்தவர்கள் சாப்பிட்டதற்கான தொகையை மேற்குறிப்பிட்ட சங்கத்தினர் செலுத்தினார்கள்.

கொரோனா வைரஸ் பரவாமலிருப்பதற்கான தடுப்பு முயற்சியாக அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள், சாப்பிடும்முன் மஞ்சள் தூளும் வேப்பிலையும் கலந்த கரைசலில் கை கழுவிவிட்டு சாப்பிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டுமல்லாமல் ஒரு தட்டில் மிளகு, கல் உப்பு, வேப்பிலைக் கொழுந்து என மூன்றையும் கலந்து வைத்திருந்தார்கள். சிறிதளவு உப்பு, இரண்டு மூன்று மிளகு, ஒன்றிரண்டு வேப்பிலைக் கொழுந்து மூன்றையும் மென்று விழுங்குவது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் எனவும், கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் விழிப்புணர்வுக்காக அவற்றை வைத்திருப்பதாக சொன்னார்கள் அம்மா உணவக நிர்வாகிகள்.

அது தவிர, நிலவேம்புக் குடிநீரும் வைக்கப்பட்டிருந்தது. நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதற்காக, உணவகத்திற்கு வருகிறவர்கள் நிலவேம்புக் குடிநீரைக் குடிக்கவும் தேவையெனில் பாட்டில்களில் எடுத்துச் செல்லவும் செய்யலாம் என்றும் தெரிவித்தார்கள்.