சாதி வெறிக்கு எதிரான படம் “எட்டுத்திக்கும் பற”

Spread the love
வர்ணாலயா சினி கிரியேசன், வி 5 மீடியா சார்பில் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் தயாரிக்க, எஸ்.பி. முகிலன், எஸ்.வினோத் குமார் இணைந்து தயாரிக்க, கீராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்,  ” எட்டுத்திக்கும் பற “
 
சமுத்திரகனி, முனீஸ்காந்த், சாந்தினி, நித்தீஸ் வீரா, முத்துராமன், சாஜூமோன், சாவந்திகா, சூப்பர் குட் சுப்பிரமணி, சம்பத்ராம்,  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
ஒளிப்பதிவு: சிபின் சிவன்,
இசை. எம்.எஸ். ஸ்ரீகாந்த்
படத்தொகுப்பு: சாபு ஜோசப்
நடனம்: அபிநய ஸ்ரீ
சண்டை: சரவன்
பாடல்: சினேகன், கு.உமாதேவி, சாவீ
மக்கள் தொடர்பு  – கோபிநாதன், மணவை புவன் 
கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் – கீரா
 
படம் குறித்து இயக்குனர் கீரா உடனான சந்திப்பில் இருந்து…
 
இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறோம். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் படம் சொல்லியிருக்கிறது.
 
கேள்வி :  ” பற ” என்கிற தலைப்பை எதிர்ப்புக்கு பயந்து எட்டுத்திக்கும் பற என மாற்றிவிட்டீர்களா?
 
பதில்: பற என்றால் கூட, பறத்தலாக பார்க்காமல் சாதியாகப் பார்ப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது வருத்தமான, உண்மை. அப்படி சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.
 
ஆனால் படத்தில் நாங்கள் முன்னெடுத்த விசயம் எதிலும் சமரசம் செய்துகொள்ளவில்லை. அதே நேரம், தலைப்பு காரணமாக தயாரிப்பாளர்களுக்கும் சில பிரச்சினைகள் ஏற்படும் போல இருந்தது.
படமும், அது சொல்லும் செய்தியும்தான் முக்கியம். அது மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அதற்கான யுக்தியாகத்தான் தலைப்பில் திருத்தம் கொண்டு வந்தோம். அவ்வளவே.
 
கேள்வி: நாடகக் காதல்  என்பதுதான் பிரச்சினைகளுக்கே காரணம் என சொல்லப்படுகிறதே..
 
பதில்:. காதல் என்பது மனிதரின் இயற்கையான உணர்வுகளில் ஒன்று. இதில் எப்படி நாடகம் வரும்? அப்படிச் சொல்வதே முட்டாள்த்தனம். அயோக்கியத்தனம். இது போன்ற கருத்து மனித சமுதாயத்தையே இழிவு படுத்துகிறது.
 
கேள்வி: பள்ளி மாணவிகளை காதலிப்பது போல் ஏமாற்றுவதாக செய்திகள் வரத்தானே செய்கின்றன..
 
பதில்: பதின் பருவத்தில்.. அதாவது 13 வயது துவக்கத்திலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் உடலில், உள்ளத்தில் பருவ மாறுதல்கள் ஏற்படும். அது இயல்பு. அந்த நேரத்தில் பாலின ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வே. அது எப்படி நாடகமாகும்?
 
அழகி என்ற படத்தில்  ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 12ம் வகுப்பில் படிக்கும் போது இருவரும் பார்க்கிறார்கள்.. அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.  அந்த உணர்வை ரசிகர்களுக்கும் கடத்தியதால்தான் படம் வெற்றி பெற்றது. அந்த உணர்வு பொய்யா?
 
கேள்வி: அப்படி என்றால் சிறுவயதில் திருணம் செய்ய வைக்கவேண்டுமா?
 
பதில்: அப்படிச் சொல்லவில்லை. ஆனால் அந்த பருவத்தில் ஏற்படும் உணர்வை கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்..
 
கேள்வி: நாடகக்காதல் என்பது நடக்கிறது. இதில் ஈடுபடும் இளைஞர்களைக் கொல்ல வேண்டும் என, திரவுபதி என்ற படத்தின் டீசரில் காட்சி வருகிறதே..
 
பதில்: இவை போன்ற பிற்போக்கு படங்கள் சமுதாயத்துக்கே ஆபத்தை ஏற்படுத்தும். மனித சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது.
 
கேள்வி: உங்களது, “எட்டுத்திக்கும் பற” படத்தில், ஒரு அரசியல்வாதியை எதிர்மறையாக சுட்டிக்காட்டும் விதமாக.உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறதே..
 
பதில்: இரு தனி நபர்களுக்குள்ளான  காதல் விசயத்தை, எப்படி தமிழ்நாடே அதிரும்படியான விசயமாக்குகிறார்கள்… அதன் மூலம் எப்படி அரசியல் லாபம் அடைகிறார்கள் என்பதை ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறோம். அது குறிப்பிட்ட அரசியல் தலைவரை மட்டும் சொல்லவில்லை.. அப்படிப்பட்ட எல்லா அரசியல்வாதியையும் சொல்லியிருக்கிறோம்
 
கேள்வி: படம் குறித்து வேறு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்..
 
பதில்: படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் அதிரவைப்பதோடு, சிந்திக்க வைக்கும்.
படம் மார்ச் மாதம்  உலகம் முழுவதும் வெளியாகிறது.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.