அனுமன் போல உதவியவர்; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு இளையராஜா நடத்திய விழாவில் ரஜினி புகழாரம்

Spread the love

A50A9406எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.

இதுபற்றிய விவரம் வருமாறு ;

மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  என்கிற பிரமாண்ட  இசை நிகழ்ச்சியை நேற்று மாலை சென்னை காமராஜர்  அரங்கில் நடத்தினார். . நிகழ்ச்சிக்கு திரையுலகினர் யாரையும் இளையராஜா அழைக்கவில்லை என்றபோதும் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் வந்திருந்து கடைசிவரை இருந்து கண்டு களித்தார்.

ரஜினியை மேடைக்கு அழைத்த இளையராஜா, அவர் முன்னிலையில் நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட நிதியை எம்.எஸ்.வி குடும்பத்தினருக்கு வழங்கினார். 
விழாவில் ரஜினி பேசும் போது. ” எம்.எஸ்.வி. பெரிய இசை மேதை, பெரிய இசை மகான். இவர் இசை ஞானி என்றால் அவர் இசை சாமி. அதாவது இசைக் கடவுள்.அந்தக் கடவுள்பற்றி இப்படிப்பட்ட ஞானிகளுக்குத்தான் தெரியும் அதுதான் அவரைப்பற்றி இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

திறமை என்பது எல்லாருக்கும் இருப்பதில்லை அது அப்பா, அம்மா, கொடுத்து வருவதல்ல. கடவுள் கொடுத்துவருவது. திறமை என்பது கடவுள் கொடுத்து வரவேண்டும் .  சரஸ்வதி கடாட்சம் இருப்பவர்களுக்கே அது கிடைக்கும். எம்.எஸ்.வி அப்படிப்படட இசைத்திறமை பெற்ற மேதை .அந்தத் திறமையால் பணம் வரும்,  பெயர்வரும்,புகழ் வரும் .

ஆனால் இவை எல்லாம் வந்து விட்டால் தலை,கால் நிற்காது. தலைக்கனம் வந்துவிடும். ஆனால் இவர் கடுகளவு கூட தலைக்கனம் இல்லாமல் இருந்தார்.” என்றார்.

”சினிமா உலகம் பெரியது. பலரும் வந்தால் நிகழ்ச்சியின் போக்கும் சூழலும் மாறிவிடும் என்றுதான் நான் யாரையும் அழைக்கவில்லை.அப்படிப்பட்ட நிலையில் பலரும் வராத போது உங்களுக்கு மட்டும் இங்கே வரத் தோன்றியது.எப்படி?  ”என்று ரஜினியிடம்  இளையராஜா கேட்டார்.

அப்போது ரஜினி பதிலளிக்கும் வகையில் பேசும் போது,

”எம்.எஸ்.வி அவர்கள்  பெரிய மேதை.அவர்1960- களிலேயே- 70 களிலேயே  புகழ்பெற்று விளங்கினார் அப்போது எம்.ஜி.ஆர். சிவாஜி போன்ற  பெரிய நடிகர்களையும்  ஸ்ரீதர்,பாலசந்தர் போன்ற பெரிய இயக்குநர்களையும், டி.எம்.எஸ்., பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற இசைக்கலைஞர்களையும் உயர்த்தி உச்சத்தில் கொண்டு சென்றவர் அவர். அவரால் மேலே உயர்ந்து புகழ்பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள்

அவர் ராமாயணத்தில் ராமனுக்கு அனுமன் உதவியதைப் போல பலருக்கும் உதவியிருக்கிறார். அனுமனைப்போல பெரிய உதவிகள் செய்தார். ஆனால் அணிலைப் போல எளிமையாக வாழ்ந்தவர்.

அவரைப் போற்றிப் பாராட்டிக் கொண்டாடி நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் நானும் ஆசீர்வாதம் பெற்றதைப் போல நினைக்கிறேன்

.நீங்கள் இசைஞானி, எப்போதும் தன் மனதில் பட்டதை சொல்பவர். யார் பற்றியும் கவலைப் படாமல் பேசுபவர் உள்ளத்தின் உணர்வுகளை ஒளிக்காமல் வெளிப் படுத்துபவர். உங்களை எம்.எஸ்.வி எப்படி பாதித்தார் என்பதை தெரிந்து கொள்ளவே இங்கு வந்தேன். என்னுள்ளில் எம்.எஸ்.வி. என்று நீங்கள் என்ன கூற  நினைக்கிறீர்கள்? உங்களை அவர் எப்படிப் பாதித்தார் என்று எப்படிச் சொல்கிறீர்கள் என்று அறிய எனக்கு ஆவலாக இருந்தது, வந்தேன் அற்புதமான நிகழ்ச்சி இது.

அவரைப் போல இசை மகான் இதுவரை திரையுலகில் நான் பார்த்ததில்லை. இனியும் பார்க்கப் போவதும் இல்லை.”  இவ்வாறு ரஜினி பேசினார்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.