ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுங்கள் புதுவை முதல்வருக்கு இயக்குநர்வ.கௌதமன் வேண்டுகோள்.

Spread the love

புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்வுகளில் பங்கெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு வந்த நான், ஈழத்தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக சுவிஸ்நாட்டில் உள்ள ஐ.நா பெருமன்றத்தின் முன் நடைபெற்ற ஜெனீவாப் பேரணியில் கலந்துவிட்டு பிரான்ஸ் மண்ணில் நடைபெற இருக்கின்ற தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வில் பங்கெடுப்பதற்காக காத்திருக்கும் நிலையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடந்து முடிந்து கடந்த ஆறு ஆண்டுகளாக உலகம் முழுவதும் தமிழர்கள் கெஞ்சி, கதறி, கோரிக்கை வைத்து உலகிலுள்ள  ஒவ்வொரு அதிகார வர்க்கத்தின் முன்பும் உக்கிரமாக்ப் போராடிய நிலையில் கடந்த மார்ச் மாதம் நல்லதொரு தீர்வு திட்டம் ஐநாவால் வெளியிடப்படும் என நம்பி காத்திருந்தோம். அமெரிக்காவுக்கும், இந்தியாவிற்கும் ஒவ்வாத ராஜபக்சே அரசு பதவி இழந்த நிலையில் சிறீசேனா பதவியேற்று ஐநாவிடம் அவகாசம் கேட்டக அது ஆறுமாதம் நீடிக்கப்பட்டு தமிழர்களின் தலையில் இடியை இறக்கியது ஐநா.

இந்த செப்படம்ரரிலாவது நல்ல தீர்வு வரும் என நம்பிக் காத்திருந்தோம். இப்பொழுது தீர்ப்புக்குப் பதிலாக மீண்டும் விசாரணை நடக்கும் அது சர்வதேச விசாரணை அல்ல. கலப்பு விசாரணை. அந்த விசாரணைகூட யார் தமிழினத்தை அழித்தெழித்து ‘இனப்படுகொலை’ செய்தார்களோ அவர்களது சிங்கள மண்ணிலேயே நடத்திக் கொள்ளலாம். அதனை அங்கு வந்து சர்வதேச நீதியாளர்கள் பார்வையிடலாம் என்கிற போக்கில் அது தி;சைதிருப்பப்பட்டு  தமிழர்களுக்கான உரிமைகளை முற்று முழுதாக நீத்துப் போகிற வேலையினை அமெரிக்காவும், அவர்களுக்கு துணை நிற்கின்ற இந்திய தேசமும்  உள்ளடி வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றன.

ராஜபக்சே- சீனா உறவு கழன்ற நிலையில் இவர்களின் சொல் பேச்சினை இம்மியளவு கூட தட்டாத ரணிலும் பதவியேற்ற பின்தான் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் போக்கில் இத்தகைய பெருமாற்றம் ஏற்பட்டு தமிழர்களுக்கான பெருந்துரோகம் அரங்கேற ஆரம்பித்திருக்கிறது.

இந்த உலகின் மூத்த இனம்தமிழினம், மூத்த மொழி தமிழ் மொழி. தமிழர்களுக்கு மட்டும்தான் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் கொண்ட வரலாறு இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆண்ட நம்மன்னர்கள் ராஜராஜ சோழனும், ராஜேந்திரசோழனும் இந்தியாவின் பெரும் பகுதியையும், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகுளை கட்டியாண்டார்கள். இன்று நமமிடம் ஒன்று கூட இல்லை. இருந்த ஒரே ஒரு சின்னஞ்சிறிய தேசம் தமிழீழத்தைக்கூட  உலகத்தின் பல வல்லரசுகள் ஒன்றுகூடி சிதைத்து சின்னாபின்ன மாக்கி போட்டுவிட்டது. மொத்தம் மூன்றரை இலட்சம் உறவுகளைப் பலிகொடுத்துவிட்டு நின்றுகொண்டிருக்கிறோம்.

இவ்வுலகில் நமக்கென்று நீதி கேட்க எவரும் இல்லை. ஆனால் நமக்காக நம்மக்களால் உருவாக்கப்பட்ட முதல்வர்களான தமிழ்நாடு முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் அவர்களும், மரியாதைக்குரிய நீங்களும், தமிழீழத்தின் வடக்கு பகுதி முதல்வரான மரியாதைக்குரிய விக்னேஸ்வரன் அவர்களும், மலேசியாவின் பினாங்கு மாநிலததின் துணைமுதல்வரான அய்யா ராமசாமி அவர்களும் தமிழ் உணர்வோடு இருக்கிறீர்கள் என்பதே மிகப்பெரிய ஆறுதல், நம்பிக்கையுமாக தமிழினத்திற்கு வழிகாட்டுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்ட மன்றத்திற்கு பதினைந்து கல்லூரிகளைச்சேர்ந்த மாணவ தலைவர்களுடன் நானும் இணைந்து மாண்புமிகு ஜெய லலிதா அம்மையாரிடம் மனு ஒன்றைச் சமர்ப்பித்தோம். அதில் நீங்கள் ஏற்கனவே நிறைவேற்றிய சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பொதுவாக்கெடுப்பு என்கிற தீர்மானங்களை மீண்டும் பலம் பொருந்திய தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி கூடவே தமிழர்களின் உரிமைக்கு அமெரிக்கா சதிசெய்தால் அதற்கு இந்தியா துணைபோகக் கூடாது என்கிற தீர்மானத்தை சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தோம். மரியாதைக்குரிய முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களும் பரிசுத்தமான மாணவர்களின் வேண்டுகோளை ஏற்று மறுநாளே தீர்மானம் நிறைவேற்றினார். உலகத் தமிழர்கள் அவர்களுக்கு உளமார நன்றி கூறினர்.

புதுவை மண்ணில் எளிமையின்சிகரமாக கர்மவீரர் காமராஜரைப் போன்று திருமணம் கூட செய்யாமல் தனது வாழ்க்கையை தமிழ் மக்களுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட தாங்கள் தமிழினம் வாழ, இந்தப் பூமிப் பந்தெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழினம் மீண்டும் ஈழமண்ணில் குடியேறி நிலைத்த நிம்மதியோடு வாழ புதுவை சட்டசபை கூடியுள்ள நிலையில் தாங்களும் தங்களின் புதுவை சட்டமன்றத்தில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை, மற்றும் பொதுவாக்கெடுப்பே தமிழீழ மக்களுக்கு முறையான நீதியினைப் பெற்றுக் கொடுக்குமென்றும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை இந்திய ஒரு போதும் முன்னெடுக்கக் கூடாது என்றும் மாறாக தமிழர்களுக்கு உரிமை கிடைக்க இந்தியா வலுவான தீர்மானத்தினை முன்னெடுக்க வேண்டுமென்றும் சிறப்பு மிக்க தீர்மானங்களை கொண்டுவர வேண்டுமென்று உலகத்தமிழர்களின் சார்பாகவும், உலகம் முழுக்க வாழ்கின்ற மாணவர்கள், இளையோர்களின் சார்பாகவும் அன்போடு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

தாங்கள் நிறைவேற்றப் போகும் தீர்மானம் நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு விடியலை, வெளிச்சத்தைத்தரும். நம்பி காத்திருக்கிறோம்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.