விவசாயி வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும் கவிஞர் வைரமுத்து கண்டனம்

Spread the love

vairamuthuவரலாற்றுக்கு நினைவு தெரிந்தநாளிலிருந்து நெற்களஞ்சியம் என்று கொண்டாடப்படும் தஞ்சைப்பாசனப்பரப்பு பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் தமிழ்ச்சமூகத்தில் நிலவுகிறது.

“விளைந்தால் விலையில்லை;

விலையிருந்தால் விளைச்சலில்லை” என்ற சந்தைக்கலாசாரத்தால் விவசாயி ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கிறான். இப்போது காவிரியில் தண்ணீரும் கண்களில் கண்ணீரும் வற்றிப்போன பிறகு என்ன செய்வான் பாவம் ஏழைத்தமிழ் உழவன்?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழ்நாட்டுக்கான உரிமைத் தண்ணீரைக் குறைத்துக் கொடுத்தது.அந்தக் குறைந்த தண்ணீரையாவது காவிரி மேலாண்மை வாரியம் பெற்றுக்கொடுக்கும் என்றநம்பிக்கையின்மீது இப்போது நம்பிக்கை இல்லாமல் செய்வது நியாயமா?

உச்சநீதிமன்றத்தீர்ப்பு ‘ஸ்கீம்’  என்ற சொல்லைச் சுட்டியிருக்கிறது.
கிளிஎன்றாலும்கிள்ளைஎன்றாலும்ஒன்றுதான்.‘ஸ்கீம்’  என்றாலும் காவிரி மேலாண்மை வாரியம் என்றாலும் ஒன்றுதான் என்று உச்சநீதிமன்றத்திற்கு விளக்க வேண்டிய மத்திய அரசே உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்பது விசித்திரமாய் இருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பே எங்கள் உழவர்களின் வேட்டியைக் கிழித்துவிட்டது. மத்திய அரசோ கிழிந்த வேட்டியையும் பறிக்கப்பார்க்கிறது. உழவர்கள் வேட்டி இழந்தால் நாடு நிர்வாணமாகிவிடும்.

அரசியலின் பற்சக்கரங்களுக்கு மத்தியில் விவசாயிகளின் விலா எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்கத் தொடங்கிவிட்டது.

இந்தியாவின் ‘கல்ச்சர்’ என்ன என்று கேட்டபோது  ‘அக்ரிகல்ச்சர்’ (விவசாயம்) என்றார் வல்லபாய்பட்டேல். அவரை நேசிக்கிறவர்கள் இதை மறந்திருக்கமாட்டார்கள்.

மீண்டும் மீண்டும் நீதிமன்றத்துக்குள்ளேயே சுற்றுவது கொக்கு விழுங்கிய மீனைத் தொண்டைக்குள் இறங்கித் தேடுவதாகிவிடும்.

கண்ணீர் வற்றிப்போன தமிழ்நாட்டு உழவர்களின் கண்களில் இரத்தம் கசிவதற்குள் காவிரிமேலாண்மைவாரியம் அமையவேண்டும் என்று ஒரு விவசாயி மகனாகக் கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.

admin

Mixture of entertainment like movie related to photographs, Events, Commercial Events and News.